'மீண்டுவரும் ஐரோப்பா... மோசமான பாதிப்பில் தெற்காசியா' - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

0 5955
உலக சுகாதார அமைப்பு

'உலகளவில்  கொரோனா வைரஸ் பரவல் மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் போராட்டம் சூழலை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது' என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு.

சீனாவிலிருந்து பரவிய நாவல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரை இறப்பைத் தழுவியிருக்கிறார்கள். ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். இதனால் மிகப்பெரிய பொருளாதார பிரச்னையும் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. உலகளவில் நிலைமை மேலும் சிக்கலாகிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஜெனிவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் திங்கள் கிழமையன்று காணொளி காட்சி மூலம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது...

"கிழக்கு ஆசியாவுக்குப் பிறகு ஐரோப்பா கொரோனோ தொற்றின் மையமாகத் திகழ்ந்தது. ஆனால், தற்போது அமெரிக்கா இவற்றை மிஞ்சிவிட்டது. கொரோனோ வைரஸ் தாக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஐரோப்பா தற்போது மீண்டு வருகிறது. ஆனால், உலகளவில் நிலைமை மேலும் மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

கடந்த பத்து நாள்களில் மட்டும் ஒன்பது தினங்கள் தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.  இதில் 7 - ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மட்டும் 1,36,000 பேருக்கு வைரஸ் தொற்று பதிவானது. ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். இவற்றில் 75 சதவீத பாதிப்புகள் அமெரிக்கா  மற்றும் தெற்காசிய நாடுகளில் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. உலகளவில் நோய்த் தொற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படும் சூழலே நிலவுகிறது. ஆறு மாதங்களாகப் பரவி வரும் நோய்த் தொற்றை இனியும் எந்த நாடும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது" என்றும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

இனவெறிக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்துப் பேசுகையில், "இந்த மோசமான சூழலில், மே 25 - ம் தேதி ஜார்ஜ் ப்ளாய்ட் அமெரிக்காவில் கொல்லப்பட்டபிறகு உலகளவில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் திறலாகப் பங்கு கொள்வோர் நோய்த் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள வேண்டும். உலக சுகாதார அமைப்பானது சமத்துவத்தையும், இனவெறிக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தையும் ஆதரிக்கிறது. அனைத்து விதமான பாகுபாடுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். இனவெறிக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பாதுகாப்பான முறையில் போராட ஊக்குவிக்கிறோம். போராட்டத்தில் பங்கு கொள்ளும்போது முடிந்த வரை ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று போராடுங்கள். கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணியத் தவறாதீர்கள்" என்றும் அறிவுறுத்தினார்.

டெட்ராஸ் மேலும் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான PPE உபகரணங்களை 110 நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. 126 நாடுகளுக்கு 129 மில்லியனுக்கும் அதிகமான PPE உபகரணங்களை அனுப்ப இலக்கு நிர்ணயித்திருக்கிறோம் என்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments